Tuesday, May 5, 2009

இந்து மத பண்டிகைகள் - பகுதி - 6

கிருஷ்ண ஜயந்தி

கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், 'உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்தர்கள் தொல்லை பொறுக்கமுடியவில்லை அதைப்போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்' என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரை பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டுமயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதானகோசத்தில் உள்ளது.

கிருத்திகை ஏன்?

சப்த இருடிகளில் வசிட்டர் ஒழிந்த மற்ற அறுவரின் மனைவிமாரை ஒருமுறை அக்கினிபகவான் மோகித்தான். இதனை அறிந்த அக்கினியின் மனைவியாகிய சுவாலை, அவர்களால் ஒருவேளை தனது நாயகனுக்குச் சாபம் நேரக்கூடும் எனப்பயந்து, அருந்ததி நீங்கிய மற்ற ஆறு பேர்களின் உருக்கொண்டு அக்கினியைக் கூடினாள். இதை அறிந்த ஆறு ரிஷிகளும் தம் தேவிமார்கள் குற்றப்பட்டனர் என்று தமது தேவியரை வினவினர். அவர்களோ நடந்ததைக் கூறினர். ஆனால் , அவர்கள் அதுகேட்டுத் தேறாதிருந்தனர். இதனால் அந்த ஆறு மனைவியரும் நட்சத்திரப்பதம் அடைந்தனர். இவர்கள் அறுவரும் குமாரக் கடவுளுக்கு முலைப்பாலுாட்டி விரதப் பலமடைந்தனர்.

(அபிதான சிந்தாமணி; பக்கம்445)

அமாவாசை ஏன்?

அச்சோதை என்னும் புண்ணிய நதி வடிவமான பெண் மாரீ மக்களாகிய பிதுர்க்களுக்குக் குமாரி. இவள் தன் பிதுர்களால் நிருபிக்கப்பட்ட அச்சோதமென்னும் நதிக்கரையில் 1,000 வருஷம் தவஞ்செய்ய, பிதுர்க்கள் பிரத்தியட்சமாயினர். அவர்களுள் ஒருவ னாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் சுவர்க்கத் திலிருந்து தள்ளப்பட்டு, பூமியில் விழாது அந்தரத்தில் நின்று தவஞ் செய்தாள். அவள் வசமாகாத மாவசு இச்செய்தி நடந்த தினத்தை 'அமாவாசை'ஆக்கினான்.

(அபிதான சிந்தாமணி பக்கம் 26)

ஆயுதபூஜையால் அழிந்த ராஜ்யம்

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்கமன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவன் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சைமீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமயமாகும். படைவீரர்களது படைக்கலங்கள் எல்லாம் ஆயுதபூசைக்காகக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன மந்திரிகளையும். பார்ப்பன குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள் , "மன்னா கவலைப்படாதீர்கள் ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திரவிரோதம். நம் நாட்டின் மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனே ஓர் இந்து, மேலும் பரம வைணவன். ஆகவே திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசிச்செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்"என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச்செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.

வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச்செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும் அனாயாசமாகவும் துளசிச்செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன் "வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர்செய்தல் கூடாது" என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒழிந்து விட்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும் வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.

இதனால் தானோ "பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கர் துரைத்தனம் கெட்டது" என்று பழமொழி ஏற்பட்டது போலும்.

ஆயுதபூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?

நல்லநாள், கெட்டநாள், பண்டிகை கொண்டாடு வதெல்லாம் எதற்காக? மதத்தாலே ஏற்பட்ட சாதியை புராணத்தால் புகுத்தப்பட்ட சாதியை ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத்திரும்ப ஞாபகத்தில் கொண்டு வருவதற்குத் தனித்தனியாகப் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக , பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், மூலம் பிரசாரம் செய்வதே தவிர, அதனால் எந்தவிதப் பலனும் இருப்பதாகக் கூறமுடியுமா?

தந்தை பெரியார் .