மாரியம்மன் திருவிழா
கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராமதேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக்கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.
இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.
இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அன்னிய புருஷன்மீது இச்சைப்பட்டு , அதாவது ,அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்று விடும்படியாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளையிட்டார். பரசுராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்றுவிட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து மகனுக்காக மாரியை பிழைப்பிக்கச் செய்ய இசைந்து. மந்திரநீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில் , கொலைக்களத்தில் பலமுண்டங்கள் வெட்டப் பட்டு இருந்தால் அடையாளம் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலையுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து 'நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கேயே போய் அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு' எனக் கூறி அனுப்பினான். அதுமுதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன்வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்கும் கோயில் கட்டிமாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள் . இது ஒரு புராணம்.
சிவபுராணத்தில் மாரியானவள் கார்த்தவீரியனை மோகித்துச்சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.
மற்றொரு புராணத்தில் அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப் பட்டதால் அவள் அவனுடன் உடன் கட்டை ஏறினான். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும் அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள "பஞ்சமத்" தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.
அதைக்கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும்,பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள் ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம் தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை , உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபச்சாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1. சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.
2. கார்த்த வீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும் கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள்கள் இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம் , நாகரிகம் என்பவை இல்லாமல், இவையாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதுபற்றிக் கவலைப்படவேண்டாமா என்றுதான் கவலைப்படுகின்றேன்.
மகாமகம்
மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுபற்றி எல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவ புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால் , தீர்த்தம் , ஸ்தலம், மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு , கடையர் களாய், மடையர்களாய் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
குளம் என்பது ஒரு சாதாரணத் தெப்பக்குளம் தீர்த்தம் என்றாலும் நதி என்றாலும் குளம் என்றாலும் மழை பெய்வதனால் எற்படும் வெள்ளங்களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும். ஊரில் உள்ள அசுத்தங்களையும் , கசுமாலங்களையும் அடித்து வந்து தேக்கி இருப்பது தான் மற்றக் குட்டித் தீர்த்தம் என்பதும்,கிணற்றுத் தண்ணீர் ஊற்றம் போன்ற ஊற்றாகும்.
மேலும், அந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் (மாமாங்கக் குளத்தில்) வடக்கில் ஏழு தீர்த்தங்களும் கிழக்கில் நான்கு தீர்த்தங்களும் நடுமத்தியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் உள்ளதாகவும், ஆக இந்த மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அந்தப் புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் எவ்வளவு நகைக்கத் தகுந்த விஷயம். இதை எழுதியவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு முட்டாள் என்பது அல்ல நமது கேள்வி! இதைப் படித்துப் பார்த்து அதன்படி நம்பி நம் மக்கள் நடப்பார்கள் என்று நம் மக்களை எவ்வளவு முட்டாள்களாகவும் அடி வண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பது தான் நமது கேள்வி. மேலும், கும்பகோணம் ஸ்தலபுராணத்தைப் பார்த்ததைக் கீழே குறிப்பிடுகின்றோம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி , சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னிகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, "உலகிலுள்ள மக்கள் எல்லோரும் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு தங்களைப் பாவங்களிலிருந்து மீட்டுக் கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களின் பாவங்களைச் சுமப்பதை எப்படிப் போக்கிக் கொள்வது" என்றதும், சிவன் "கும்பகோணத்திலே தென் கிழக்கில் ஒரு தீர்த்தம் உண்டு. அங்கே பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதம் மகாமக நாளன்று குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்" என்றதும், "கும்பகோணம் எங்கே உள்ளது?" என்று கன்னியர்கள் கேட்டார்களாம் அதற்குச் சிவன்,
' நீங்கள் எல்லோரும் காசிக்குப்போங்கள். அங்கே வந்து நான் விக்னேஸ்வரன் எனும் பெயரில் அழைத்துப்போகின்றேன்" என்று சொல்லி குளத்தில் அவர்களை குளிக்கச் செய்து, பிறகு சிவனும் அந்தக் கன்னியர்களும் அங்கேயே கோவில் கொண்டு விட்டார்கள். அந்தக் குளத்தில் குளிப்பவர்களுக்கு சர்வ பாவமும் தொலைந்து புண்ணியம் உண்டாகி, சர்வமங்களமும் உண்டாகும் என அப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காகப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது, எந்தெந்த இடத்தில் எந்தெந்த
சாமியை எப்படியெப்படி வணங்குவது என்பதும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கதையை ஆதாரமாக வைத்து இந்த மகாமக உற்சவத்திற்கு எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், விளம்பரங்கள், பணச்செலவுகள், கஷ்டங்கள் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
அடுத்து, பாவமுள்ள மனிதர்கள் பாவத்தைப் போக்கிக்கொள்ள நதிகளில் ஸ்நானம் செய்தால் நதிகளுக்குப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் அறிவோ உண்மையோ உள்ளதா? மேலும் அந்தப் பாவத்தைத் தொலைக்க நதிகள் மகாமகத் தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என யோசியுங்கள்.
இத்தனைப் பாவங்களையும் தீர்த்துத் தன்னிடம் பெற்றுக் கொண்ட மகாமகக்குளம் எந்தஉருவில், எங்குப் போய் தன் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதை யோசித்தால் கடுகளவு அறிவுள்ள வனாவது இதை ஏற்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்!!
கந்தசஷ்டி
இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.
" உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.
தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவிசெய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்தஉலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.
கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன் படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.
கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் , முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.
ஸ்கந்தம் என்றால் , விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?
அய்யப்பன் கதை
பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்' என்றான் அதற்கு பத்மாசூரன் 'நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும்' என்றானாம்.
சிவனும் 'அவ்வளவுதானே! அளித்தேன் போ!' என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங் களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணு விடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.
அதற்கு விஷ்ணுவானவன் 'அதுதானா பிரமாதம் இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன்.'என்று கூறி அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்து பத்மாசூரன் முன் சென்று நின்றான். அந்த மோகினிப்பெண்ணைக் கண்ட அசுரன் அவளை கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள் நான் உனக்கு உடன்படுகின் றேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கின்றாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டுவா என்று கூறினாள்.
அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும் போது தம் தலையில் கைவைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான். விஷ்ணு சிவனிடம் சென்று பயத்தை விட்டு வெளியே வாருங்கள் நான் அவனைப்பெண் வேடம் எடுத்துக் கொன்று விட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.
அதற்கு சிவன், 'எப்படிப் பெண்வேடம் போட்டு சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்' என்றான் விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக்காட்டினான் . அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டு ஓட இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.
இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்ப துண்டு. எனவே இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும். நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம்கூட வெட்கப்படவேண்டியதாம். இயற்கைவிபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன் . இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.
சங்கராந்தி
பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும் , உழைப்பின் உயர்வை, உலகுக்கு அறிவுக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புதுமரியாதையை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்! அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி சங்கராந்தி என்றும் பெயரிட்டு தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்
சூரியன் தனுர்; ராசியில் சஞ்சரிக்குங் காலம் இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தட்சீணாயனம் ஆறு மாத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத் தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவமாய் அதஞ்செய்திருந்த படியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப்பொங்கல் என்பர்.
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற , கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் கூறுவர்.
இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகித் தள்ளியுள்ளனர் இந்த பார்ப்பனர்கள். மழை பொழிவதாம்- அதை மலையைக் குடையாக்கித் தடுப்பதாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள் ! தமிழர்களே அதை நம்பப் போகிறீர்களா?
தந்தை பெரியார்
No comments:
Post a Comment