
கடவுளைப் புரிதல்
காலப்பள்ளத்தில்
மூடக் குழியில்
புராணப்புழுதி மூடிக்கிடந்தான் முருகன்
தோண்டித் துடைத்து
விஞ்ஞானத் தண்ணீரில் கழுவினேன்
ஒற்றைத்துணி சற்றே அசைவுற
நெற்றிச்சுடர் பற்றிப் பரவிட
வெற்றித்திரு வேலுக்கதிபதி உயிர்கொண்டான்
கடவுளா நீ என்றேன்
மூத்தகுடி காத்த
மூதாதை என்றான்
குன்றில் ஏன் குடி என்றேன்
ஆதிமனிதன் குடில்
அதுதானே என்றான்
குளிர்மலையில் ஏன்
குறையுடை கொண்டாய் என்றேன்
இரையாகும் விலங்கைத்
துரத்திக்கொண்டே
இரைதேடும் விலங்குவிட்டு
உயிர்தப்பி ஓட-
சுனைகள் ஆறுகள்
நீந்திக் கடக்க-
தொங்கும் ஆடை
தொல்லையா இல்லையா?
இன்னொன்றும் நெஞ்சில் எழுது
நெசவுகண்டது குறிஞ்சியில் அல்ல
மறவாதே அது மருதம் என்றான்
படையலுக்கேன் முருகா
தேனும் தினைமாவும்... ?
சுடுதல் அவித்தல் சமைத்தல் என்னும்
அநாகரிகங்கள் அடையு முன்னே
காயும் கனியும் கிழங்கும் இலையும்
தானாய் விளைந்த தானிய மணியும்
தேனாய் வழிந்த திரவியப் பொருளும்
ஊனாய் இருந்த உண்மை உணர்த்தவே.
கொடியில்
சேவல்பரக்கும் சேதி என்னவோ?
வேட்டைக் களைப்பில்
மரணம்போல் உறங்கும் எங்களை
அதிகாலை எழுப்பும் முதற்பறவை அதுதானே..?
போகட்டும்
வேலோடு நீயலையும்
வினோதம்... ?
கல்லாயுதம் தோற்றவிடத்து
வேலாயுதம் கண்ட முதல்மனிதன் நான்
வேலின் தொழில்கள்
விளம்பக்கேள்!
வேட்டைக்காட்டில் வெற்றி தந்ததும்
வேளாண்மைக்குக் காவல் தந்ததும்
மடவார் தம்மின் மானம் காத்ததும்
மாற்றார் வெருட்டி மண்புலம் காத்ததும்
முன்னோடிகளை விலங்குண்ணாமல்
அந்நாள் காத்த ஆயுதனாதும்
கைவேல் கைவேல் கைவேல் தானடா!
கைவேல் இல்லையேல் நீ நான் ஏதடா?
தாத்தா என்றேன் நான்
பேரனே என்றான் முருகன்
இருவர் தழுவல் இறுக்கத்தில்
நொறுங்கிச் சிதறிக் கிடந்தன
நூற்றாண்டுகளின் துகள்கள்.
- வைரமுத்து.
கொஞ்சம் தேநீர்
நிறைய வானம்
aga murugan kadavul illai namathu thatha, piragu 6 padai veedu eppadi vanthathu?? athan varalaru?????
ReplyDelete