Tuesday, April 7, 2009

பெரியார் சொல் கேளீர்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவ நாடி -உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்று பொருள்.
பகுத்தறிவு பெரும்படியான சாதனம் , நமக்கு நீண்ட நாளாகவே தடைபட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

தடைக்கற்கள்

மக்களிடையே பகுத்தறிவை தடைப்படுத்த கடவுள்,மதம் சாஸ்திரம் முதலியவற்றைப் புகுத்தி நம்பும் படி செய்து விட்டார்கள். பொதுவாக கடவுளைப் புகுத்தியவன் ,கடவுள் பக்திக்கு முதல் நிபந்தனையாகச் சொன்னது கடவுள் பற்றி சிந்திக்க கூடாது என்பது தான்.
கடவுள் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்ட முடியாத வஸ்து,அறிவுக்கு எட்ட முடியாத வஸ்து,பஞ்சேந்திரியம் என்றால் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி இந்த ஐந்துக்கும் கடவுள் எட்ட மாட்டார்; இந்த ஐந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும். இந்த இந்திரியங்களை எல்லாம் மீறிச் சிந்திக்க மனது என்று ஓன்று உள்ளது.இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இதனை நிபந்தனைகளையும் போட்டுக் கடவுளைச் சொன்னான்.
கடவுள் என்றால் அப்படியே ஒத்து கொள்ள வேண்டும்; எங்கே-ஏன்-எப்படி என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள்.

கடவுள் போலவே மதத்தை பற்றியும் என்ன என்று சிந்திக்க கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது-யாரால் ஏற்ப்பட்டது. -என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது; சிந்தித்தால் மதம் போய்விடும். எனவே , அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

சாஸ்திரம்

கடவுள்,மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது;எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றானோ அவன் நரகத்திற்கு போவான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.
எனவே பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது-மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும்.

நமது இழிநிலை,முட்டாள்தனம் மாறவேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை,பகுத்தறிவைக் கொண்டு தாரளாமாக பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவி விடும்.

-தந்தை பெரியார்

No comments:

Post a Comment