Tuesday, April 21, 2009

தமிழன் என்றால் பொருள் என்ன இளிச்சவாயனா?

தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஈழம் என்ற போர்வையை எடுத்து போர்த்தி கொள்ள ஆரம்பித்து விட்டன.யாருக்கு வாக்களிப்பது?. குழம்பி நிற்கிறான் தமிழன். பாவம் என்ன செய்வான்? அவனை யாரும் இங்கே மனிதனாக பார்ப்பதில்லை. ஒரு வாக்காளனாக தான் பார்கின்றனர்.

இங்கே இருவகையினர் தான். ஓன்று பாமரத் தமிழன்,மற்றொருவன் படித்த தமிழன். பாமரத் தமிழன் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால், ஏதோ ஒரு கட்சியின் பெயரை கூறுவான். ஏன் அந்த கட்சிக்கு உனது வாக்கு என்றால், நான் இருபது வருடமாக அதற்குதான் வாக்களித்து வருகிறேன், இனியும் அதற்குதான் வாக்களிப்பேன் என்பான். இல்லையெனில் போன தேர்தலுக்கு அந்த கட்சிக்கு ஒட்டு போட்டேன். இந்த தேர்தலுக்கு இந்த கட்சிப்பா என்று தன் அறியாமையின் உட்சத்தை வெளிப் படுத்துவான். படித்தவனின் நிலைமையோ இன்னும் மோசம், ஏம்பா அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை கேட்டியாப்பா என்றால், அவன் நம்மிடம் IPL மேட்சைப் பார்த்தியா?, அயன் படத்தைப் பார்த்தியா என்று மறு கேள்வி கேட்கிறான். இதுதான் இங்கே நிலைமை. அரசாங்கம் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று கூறும் படித்த இளைஞர்கள் , தான் ஒரு சரியான குடிமகனா என்பது பற்றி என்றும் சிந்திப்பதில்லை. இதைதான் ஆளும் வர்க்கம் , தன் சுய லாபத்திற்காக பயன் படுத்தி கொள்கிறது.

தமிழ் நாட்டில் தற்போது எத்தனை தேர்தல் அணி உண்டு என்றே கணக்கிட முடியாது போல.
1.தி.மு.க தலைமையில் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் ஒரு அணி.
2.அ.தி.மு.க தலைமையில் பா.ம.க , ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்சிக்ஸ் கம்யூனிஸ்ட் ஒரு அணி.
3.பா.ஜ.க தலைமையில் ச.ம.க, நாடாளும் மக்கள் கட்சி ஒரு அணி.
4.தே.மு.தி.க தனித்து போட்டி.
5.ஒவ்வொரு தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்கள்.

ஒவ்வொன்றாக அலசுவோம்.

தி.மு.க

பெரியார் பாசறையில் வளர்ந்த அண்ணா தோற்றுவித்த கட்சி. 1967 லில் மொழி போராட்டத்தில் பல உயிர் தியாகங்களை செய்து, காங்கிரசை டெல்லிக்கு அடித்து ஒட்டி, அரியணை ஏறியது. ஆரம்பத்தில் தமிழனின் நலனுக்காக போராடிய கட்சி, இன்று குடும்ப நலனுக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. நாட்டுப் பிரச்சினையை விட தலைவருக்கு குடும்ப பிரச்சினையை தீர்பதற்கே அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. மகன் ஸ்டாலின் இளைஞர் அணி தலைவர்.(பேரக்குழந்தையையே பெற்று விட்டார்) ,மகள் கனிமொழி மகளிர் அணி தலைவி, மகன் அழகிரி தென் மாநில தி.மு.க வளர்ச்சி தலைவர்,
அடுத்து ஓன்று தான் பாக்கி, தன் பேரக் குழந்தையை , தி.மு.க குழந்தைகள் அணி தலைவராக்க வேண்டியதுதான்.


கலைஞர் அவர்கள் தமிழின தலைவர் என தானே கூறிக்கொள்வார், அது என்னவோ மேடையில் தன்னை மத்தியில் அமர வைத்து ,சுற்றி கவிஞர் பெருமக்கள் சுதி பாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி ஈழமக்களுக்கு போராட்டம் நடத்துவார். கண்ணீர் விடுவார், மத்திய அரசிடம் ராஜீனாமா கடிதம் கொடுப்பார், தந்தி அடிப்பார், உயிரை விடுவதாக கூறுவார், பிரபாகரனை சர்வாதிகாரி என்பார், சகோதர யுத்தம் பற்றி பேசுவார், பின் அவரே LTTE தீவிரவாத இயக்கம் இல்லை என்று கூறுவார். சிவாஜிக்கு பதில் இவருக்கு கொடுத்திருக்கலாம் நடிகர் திலகம் பட்டம்.

மத்தியில் ஆளும் ஆட்சியில் பங்கு வகிக்கும் இவர் ஏன் காங்கிரசை கெஞ்ச வேண்டும்? அங்கே இவர் செங்கோட்டையில் இருந்து வெளியேறினால், இங்கே காங்கிரஸ் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியேறும். இப்படியாகிய குழப்பத்தில் ஒரு நல்ல முடிவு எடுத்துவிட்டார், ஆட்சியா, தமிழ் மக்கள் உயிரா? என்று தராசிட்டு பார்த்ததில், மக்கள் உயிர் மேலேறியது. பார்த்து கொள்ளலாம் இருக்கவே இருக்கு கலர் t.v , ஒரு ரூபாய் அரிசி........

.தி.மு.

எதற்காக இந்த அம்மா அண்ணா படத்தை வைத்து கொண்டுள்ளதோ என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை, பகுத்தறிவாதி அண்ணா, ஆனால் தன் கட்சியின் வேட்பாளர்களை கூட ஜோதிடம் பார்த்து எடுக்கும் மிகுந்த பிற்போக்கு வாதி.இந்த அம்மா.அப்பப்போ எதிர்கட்சியை விமர்சனம் செய்வது. தமிழினம் துரோகம் செய்வது, பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை விட மறுப்பது, என சில சாதனைகள் இருந்தாலும் தற்போதைய சாதனை சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கை விட்டது. மத உணர்வை புண்படுத்தும் திட்டமாம். என்ன ஒரு தெளிந்த சிந்தனை. மேலும் கொடுமை என்றால் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை என அடிக்கடி கூறிக்கொண்டு, தன் நமட்டு ஆசையை வெளிப்படுத்துவது.தற்போதைய ஒரு மெகா காமெடி தமிழ் ஈழம் அமைப்பாராம் ஆட்சிக்கு வந்தால்............இவர் தான் கூறினார் இரு மாதங்களுக்கு முன் போரில் மக்கள் இறப்பது இயற்கை என்று.என்ன செய்வார் தேர்தல் ஜுரம் அவருக்கும் இருக்காதா?

காங்கிரஸ்

காங்கிரஸ் என கூறுவதை விட தமிழின துரோகி என சுருக்கமாக கூறலாம். காந்தி தலைமையில் வெள்ளையனுக்கு ஜால்ரா போட்ட இந்த கட்சி, ஒரே ஒரு தமிழனால் தான் தமிழ் நாட்டில் இன்றும் உள்ளது. அவர் தான் காமராஜர். பெரியார் தான் போனால் போகட்டும் ஒரு தமிழன் ஆட்சி செய்யட்டும் என்று காமராஜிற்கு ஆதரவு தந்து அரியணை ஏற்றினார். ஆனால் பின்பு மீண்டும் இந்தி திணிப்பின் மூலம் தன் சுய உருவத்தை காட்டிய போது, அதன் பல்லை பிடிங்கி எரிந்தது , தி.மு.க. அன்று முதல் இன்று வரை ஒரு ஒட்டு கட்சி தான் இந்த காங்கிரஸ். தனித்து நின்றால் ஒரு ஒட்டு விழாது.

கட்ச தீவை இலங்கைக்கு கொடுத்தது, பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்தது. 6000 தமிழ் மக்களை ஈழத்தில் கொன்றது, . இன்றும் ஈழ விடுதலையை எதிர்ப்பது. அதற்க்கு ராஜிவ் காந்தியை கேடயமாக பயன் படுத்துவது, இலங்கைக்கு ராணுவ உதவி செய்வது...என தமிழின துரோகம் பல........

பா..

சாதிக் கட்சியாக ஆரம்பித்தது பின் பாட்டாளி மக்கள் கட்சி ஆனது. நானோ என் குடும்பத்தை சாந்தவரோ பதவிக்கு வந்தால் மக்கள் என்னை செருப்பால் அடிக்கட்டும் என்று கூறியவர் ராமதாஸ். இவர் ஒரு அரசியல் குரங்கு. ஆனால் ஓன்று இவர் எந்த பக்கமோ அந்த கட்சி அரியணை ஏறி விடுகிறது. ஈழத்தை முன் வைத்து தி.மு.க வை எதிர்க்கும் இந்த கட்சி ஏன் கடைசி வரை மத்தியில் ஆட்சி வகித்தது என்பது கேள்விக்குறி. இருப்பினும் மக்கள் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி வருகிறது. தமிழை வளர்க்க பாடுபடுகிறது. மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு என சில நல்ல கருத்துகளை முன் வைக்கும் இந்த கட்சி , கடைசியில் சாதி ஒட்டு பெறவே அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், கள்ளகுறிச்சி போன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து இருப்பது வேதனைக்குரியதுதான்.........

கம்யூனிஸ்ட்

ஒருங்கிணைந்த இலங்கை அமைவதே இவர்கள் நோக்கமாம், உலகிலேயே மிகவும் பிற்போக்கான கம்யூனிஸ்ட் நம் இந்திய கம்யூனிஸ்ட் தான். ராமர் இல்லை. ஆனால் சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்பவர்களின் உடன் கூட்டணி, கேட்டால் தேர்தல் வேறாம், கொள்கை வேறாம்.உங்கள் கொள்கை யாருக்கு, வைத்து பூஜை செய்வதா? பிடிப்பு இல்லாத ஒரு கட்சி. தர்க்க வாதம் பேசி பேசி , அடிப்படை மக்கள் தேவைகளை தீர்க்க முடியாத கட்சி. இருப்பினும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்தால் ஒரு நல்ல ஆட்சி தர முடியும் என்பதில் சிறுது நம்பிக்கை இருக்கிறது.....

.தி.மு.

பொதுசெயலாளர் வைகோ , இனி அவர் மட்டுமே கட்சியில் இருப்பார் போல இருக்கிறது வரிசையாக கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் என பலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர். என் மகன் அ.தி.மு.க வில் உயிரே போனாலும் சேர மாட்டான் , என வைகோ அம்மா கூறிய சில நாட்களிலேயே , அம்மாவின் கட்சியில் இணைந்தவர். ஆரம்பம் முதலே ஈழ விடுதலைக்கு குரல் கொடுப்பவர். ஒரு தமிழ் போராளி. பிரபாகரனுடன் எனக்கு தொடர்பு உண்டு என வெளிப்படையாக கூறியவர். போடா சட்டத்தில் கைதாகி , ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தவர். இவரது செய்கைகள் தமிழ் போராட்டத்தின் கண் இருந்தாலும், இவர் எப்படி அ.தி.மு.க வில் இணைந்தார் என்பது பலரது கேள்வி... அதுவும் வெறும் நாலு சீட்டுக்காக....
இந்த முறை இவரே போட்டியிடுகிறார். பார்போம்........

விடுதலை சிறுத்தைகள்

தலைவரான திருமா, அண்ணல் அம்பேத்கர் வழி நடப்பவர். ஈழத்திற்காக போராடுபவர், உண்ணாவிரதம் இருந்தவர், காங்கிரசை ஒழிப்பதாக கூறியவர், கடைசியில் ஒரு சாதாரண அரசியல் வாதியாக சோனியா காந்தியை அன்னையாக ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.... வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.பகுஜன் சமாஜ் என்ற கட்சி , தமிழ் நாட்டில் தனக்கு போட்டியாக வந்து விட்ட இந்த நேரத்தில் குறைந்தது ஒரு M.P யாவது வேண்டும் இல்லையா ? என்று யோசித்திருப்பார் திருமா .. தா.பாண்டியன் சொன்னது போல , சீரும் புலி , சர்கஸ் புலியாக மாறிவிட்டது என்று கூறலாம்.....

பா..

ராம ராஜ்யம் கொள்கை யாக கொண்ட அணி. இந்து என்ற வேப்பிலையை அடித்து , பாமர மக்களை ஒட்டு வங்கியாக மாற்று பவர்கள். பார்ப்பன ஏகாதிபத்திய கட்சி.
கொள்கை ஓன்று தான், ராமர் கோவில் கட்டுவது. இந்து என்று கூறி தன்னை (பிராமிண தத்துவத்தை) மேல் சாதியாக நிலை நிறுத்தி கொள்வது.

பெரியார் இந்த மண்ணில் இருக்கும் வரை ஒரு இடம் கூட தமிழகத்தில் இந்த கட்சி தனித்து வெல்ல முடியாது..

தே.மு.தி.

திராவிடம் என்றால் பொருள் என்ன என்று தெரியாவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்துவிட்டர்கள். ஆரம்பத்தில் சூடாக இருந்தவர் , இப்போது அடங்கிவிட்டார். பேரம் படியவில்லை என்பதால் தனித்து போட்டி இடுகிறார். ஈழம் பற்றி வாய்திறக்காத இவர் எங்கே ஒட்டு போடாமல் போய் விடுவார்களோ என்று, இப்போது தான் பேச ஆரம்பித்து இருக்கிறார். கொள்கைகள் என்று ஓன்று கிடையாத கட்சி..........

..

சமத்துவ மக்கள் கட்சி ஆனால் நாடார் சமூகத்தினரால் இயக்கப்படுகிறது... தன்னை அடிமையாக வைந்திருந்த பார்பான் கட்சியுடன் எப்படி இவர்களால் கூட்டணி வைக்க முடிகிறதோ?.............

நாடாளும் மக்கள் கட்சி

சொல்லும் படி எதுவும் இல்லை. ஒரு சாதி கட்சி அவ்வளவுதான்...............

மக்கள் நலனுக்காக பாடுபடும் கூட்டணி எதுவென்று சல்லடை போட்டு பார்த்தாலும் ஓன்று கூட கிடைக்காது. தமிழ் ஈழ போராட்ட கட்சிகள் ஓன்று கூடி இருந்தால் , ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்து இருக்கும். பாவம் என்ன செய்வார்கள் , கேட்டால் கொள்கை வேறு, தேர்தல் வேறு என்பார்கள்.

இன்றும் ஒரு பிரியாணிக்கும், 100 ரூபாய்க்கும், குவாட்டர் சாராயத்திற்கும் ஒட்டு போடும் மக்கள் நம் நாட்டில் உள்ளனர். இது வேடிக்கை யான விசயமல்ல. இவர்கள் போடும் ஓட்டுதான் நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும். இவர்களை ஆண்டாண்டு காலமாக அடிமையாக வைத்து ஆளவும் வாழவும் பழக்கிக் கொண்டன அரசியல் கட்சிகள்.இதை கேட்க நாதியில்லை.

கேட்கும் ஒரு சிலரையும் ( சீமான், கொளத்தூர் மணி) போன்ற போராளிகளையும் ,தேசிய பாதுகாப்பு சட்டம் கைது செய்கிறது. கேட்டால் இறையான்மையாம், யாருடைய இறையாண்மை கெட்டு விட்டது? சோனியா காந்தியின் இறையாண்மை தானே? இங்கே கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்று பேசிய வருன் காந்தி கூட ஜாமீனில் வெளி வந்து விட்டார்.மக்களுக்காக பேசிய கொளத்தூர் மணியால் வெளிவர இயலவில்லை. எந்த தொலை காட்சியாவது அவர்கள் பேசியதை ஒளிபரப்பு செய்ததா? செய்ய மாட்டார்கள். செய்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள்,பின் யார் ஒட்டு போடுவது?சட்டம் என்பது பாமர மக்களுக்குத்தான், பணம் படைத்த அரசியல் வாதிகளுக்கு அல்ல.

ஒரு சீக்கியன் 1984 லில் நடந்த கலவரத்திற்கு, இன்று சிதம்பரத்தை செருப்பால் அடிக்கிறான். அவரும் மன்னித்து விட்டார். ஆனால் 6000 தமிழ் மக்கள் கொன்று , 1000 தமிழ் பெண்களை கெடுக்க காரணமான ,காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சித்துப் பேசக் கூட தமிழனுக்கு உரிமை இல்லையா? இதுதான் சுதந்திரமா?

ஆம் நாங்கள் (தமிழர்கள்) இளிச்சவாயர்கள் தான்.......

எங்கே செல்கிறான் தமிழன்? IPL மேட்சில் இருக்கும் ஆர்வம் கூட அகதி மீது இல்லையே இவனுக்கு? இவர்கள் விளையாட்டை போராக பார்ப்பவர்கள் , போரை விளையாட்டாக பார்ப்பவர்கள். இவர்கள் தேசபக்தி இந்தியா பாகிஸ்தானை வெற்றி பெரும் போது மட்டும் பீறிட்டு வெளி வரும்.

இவர்களை போன்ற தேச பக்தர்களின் நடுவே, எங்களை போன்ற தேச துரோகிகள் வாழ்வதை விட எங்களுக்கு வேறு என்ன தண்டனை இருக்க முடியும்.............

எழுத்தாக்கம்

ப.சீனிவாசன்

No comments:

Post a Comment